முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தேனியில் 3 நாட்களாக நடைபெற்ற PFI மாநில பொதுக்குழு நிறைவு: M. முஹம்மது இஸ்மாயீல் மாநில தலைவராக தேர்வு!







தேனீ, ஜனவரி 11/15: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுக்குழு ஜனவரி 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தேனியில் நடைபெற்றது. மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் அவர்கள் தலைமை தாங்கினார். இப்பொதுக் குழுவில் துவக்கவுரையாற்றிய மாநில தலைவர் தனது உரையில் பாப்புலர் ஃப்ரண்ட் கடந்த காலங்களில் கடந்து வந்த பாதை மற்றும் இயக்கத்தின் வளர்ச்சி குறித்து கோடிட்டுக்காட்டினார். பின்பு தேசிய செயற்குழு உறுப்பினர்
வழக்கறிஞர் A.முஹம்மது யூசுப் அவர்கள் தேசிய அளவிலான பணிகளைக் குறித்து எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் A. ஹாலித் முஹம்மது அவர்கள் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். அதன் பின் பொதுக்குழு உறுப்பினர்கள், ஆண்டறிக்கை குறித்தும், சமூக , பொருளாதார, அரசியல் நிலைகள் குறித்தும், வருங்காலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் எடுத்து செல்ல வேண்டிய செயல்பாடுகள், முன்னேற்றம் , நிகழ்ச்சிகள்
ஆகியவை குறித்தும் விவாதித்தனர். 
 
தேசிய தலைவர் K.M.ஷெரீஃப் சிறப்புரை :

பொதுக்குழுவிற்கு வருகை தந்திருந்த தேசிய தலைவர் K.M.ஷெரீஃப் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், “மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் மதவாத பா.ஜ.க அரசின் மக்கள் விரோத கொள்கைகள், மததுவேஷ பேச்சுக்கள், சர்வாதிகார போக்கு ஆகியவற்றை வீழ்த்தி தேசத்தின் உன்னத கோட்பாடுகளான ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றை பாதுகாக்கும் நீதிக்கான போராட்டக்களங்களில் உறுதியோடு பயணிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
 
புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் :

பொதுக்குழுவின் முக்கிய நிகழ்வாக அடுத்த இரண்டாண்டிற்கான (2015-16) மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை தேர்ந் தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. பாப்புலர்  ஃப்ரண்டின் தேசிய தலைமையிலிருந்து தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட தேசிய செயற்குழு உறுப்பினர்களான A.யாமுஹைதீன் மற்றும் வழக்கறிஞர் A.முஹம்மது யூசுப் ஆகியோர் இந்த தேர்தலை நடத்தினர். இதில் கீழ்க்காணும் நபர்கள் மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்களாக
தேர்வு செய்யப்பட்டனர்.
 
மாநில நிர்வாகிகள் :

மாநிலத்தலைவர் : M.முஹம்மது இஸ்மாயீல்
 
மாநில துணைத்தலைவர் : A.ஹாலித் முஹம்மது
 
மாநில பொதுச்செயலாளர் : M.முஹம்மது ஷேக் அன்சாரி
 
மாநில செயலாளர்கள் : J.முஹம்மது ரசீன்
 
A.முஹைதீன் அப்துல் காதர்
 
மாநில பொருளாளர் : S.இப்ராஹீம் பாதுஷா
 
மாநில செயற்குழு உறுப்பினர்கள் :

1. S.அமீர் பாஷா
2. வழக்கறிஞர் M.முஹம்மது ஷாஜஹான்
3. A.K.அமீன்
4. A.முஹம்மது பயாஸ்
5. M.முஹம்மது அலி நியாஸ்
6. A.ஆபிருதீன் மன்பயீ
7. M.முஹம்மது அலி ஜின்னா
8. A.மாஹின்
9. S.அஹமது நவவி
10. S..இல்யாஸ்
11. A.சாஹுல் ஹமீது
 
பதவிப் பிரமான நிகழ்ச்சி - தேசிய பொதுச்செயலாளர் M.முகம்மது அலி ஜின்னா பங்கேற்பு :

இப்பொதுக்குழுவிற்கு மேலிடப் பார்வையாளராக தேசிய பொதுச் செயலாளர்
M. முகம்மது அலி ஜின்னா அவர்கள் கலந்து கொண்டார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயீல் அவர்களுக்கு தேசிய பொதுச் செயலாளர் M.முகம்மது அலி ஜின்னா அவர்கள் பதவிப் பிரமானம் செய்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயீல் முன்னிலையில் உறுதிமொழி (OATH) எடுத்துக் கொண்டனர். பின்னர், முந்தைய மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்களும்,புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் அவர்களும் நிறைவுரையாற்றினர். பொதுக் குழு இயக்குனர்
S. இல்யாஸ் அவர்கள் நன்றியுரையாற்றினார். பொதுக்குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 
.
பொதுக்குழு தீர்மானங்கள்:
 
1. மத துவேஷ பா.ஜ.க விற்கு எதிராக மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் :

பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் அமர்ந்துள்ள பா.ஜ.க
அரசு நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் மதவாத ஆர்.எஸ்.எஸ்
கொள்கைகளை நடைமுறை படுத்துவதில்தான் மும்முரமாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மறைமுக இந்துத்துவ மற்றும் மக்கள் விரோத
செயல்திட்டங்கள் தற்போது படிப்படியாக அமல்படுதப்படுகின்றது. இது நமது நாட்டின் பன்முகத்தன்மைக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் மக்களை பிரித்தாளும் மதவாத கருத்துக்களை நித்தம் வெளியிடுவதை பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர்களும் அதன் தலைவர்களும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனைக் குறித்து பிரதமர் மோடி எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமஸ்கிருத திணிப்பு,கல்வியில் பாசிச சிந்தனைகளை புகுத்துவது, அறிவியலை கேலிக்கூத்தாக்குவது, மாற்று கருத்துக்களை நசுக்குவது ,தொழிலாளர் விரோதக் கொள்கைகளை அமல்படுத்துவது என தொடர்ந்து நடைமுறைபடுத்தப்பட்டு வரும் பாசிச இந்துத்துவ செயல்திட்டங்களை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.மேலும் தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி கோட்சேவிற்கு நாடு முழுவதும் சிலை வைக்க இந்த பாசிச சக்திகள் துடிக்கின்றன. நாட்டு நலனை கேள்விக்குறியாக்கும் இப்போக்கை எதிர்கொள்வதில் மதச்சார்பற்ற சக்திகள் முன்வர வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 
2. தமிழகத்தில் மதவாத பா.ஜ.க வை காலூன்ற
விட மாட்டோம் :

மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து தமிழகத்தில் மத மோதல்கள் அதிகரித்துள்ளன . பந்த் என்ற பெயரில் இவர்கள் நடத்தும் அராஜகங்களில் ஏராளமான அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பெண்களை கொச்சைப்படுத்தும் வாசகங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன. சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க மற்றும் சங்க பரிவார கும்பல்கள் வட இந்தியாவில் கடைபிடித்த அதே மத மோதல் கலாச்சாரத்தை அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் ஏற்படுத்த
துடித்து வருவதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் இந்த பிரிவினைவாத சக்திகள் மீது மாநில அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 
3. வக்ஃப் சொத்துக்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் :

முஸ்லிம் சமூகத்தின் நல்வாழ்விற்கும், மேம்பாட்டிற்காகவும் கொடுக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களை தனிநபர்கள் ,சமூக விரோதக்கும்பல்கள், கல்வி நிறுவனங்கள், அரசு துறைகள் என அனைவரும் ஆக்கிரமித்துள்ளனர். இந்த
ஆக்கிரமிப்புகளை மீட்டு அவற்றின் உரிய சொந்தக்காரர்களான முஸ்லிம் சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டியது அரசுகளின் கடமையாகும் .மாவட்ட வாரியாக ஒவ்வொரு மாதமும் மீட்கப்படும் வக்ஃப் சொத்துக்கள் குறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சியாளர்கள் மாநில அரசு மற்றும் மாநில வக்ஃப்
வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். மாநில வக்ஃப் வாரியத்திற்கு உரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமிப்பதிலும் மாநில அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும். மாநில அரசாங்களுக்கு இந்த கோரிக்கைகளை முன் வைக்கும் அதே சமயம் வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்கும் பணியில் முஸ்லிம் சமுதாயம் களமிறங்க வேண்டும் என்றும்
இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 
4. பாலியல் வன்கொடுமைகள் இல்லா தமிழகம் உருவாக வேண்டும் :

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த கொடுமைக்கு தற்போது பச்சிளம் குழந்தைகளும் பலியாகி வருவது வேதனையை அளிக்கிறது. இந்த வன்கொடுமை நடைபெறுவதற்கு மது முக்கிய காரணம் என்பதை அறிவதற்கு பெரிய அறிவியல் ஆராய்சிகள் ஏதும் அவசியமில்லை.அத்துடன் நவீன கலாச்சார சீர்கேடுகள், ஆபாச வலைத்தளங்களும் இந்த கொடுமைக்கு வழிவகுப்பதில் சம பங்கை வகிக்கின்றன. நாட்டின் சரிபாதியாக திகழும் பெண் சமுதாயத்தை பாதுகாப்பதற்காக மதுவை தடை செய்வதுடன் ஆபாச வலைத்தளங்களையும் தடை செய்ய வேண்டும். மிக முக்கியமாக மாணவர்களுக்கு நல்போதனை வகுப்புகளை நடத்துவதில் கவனம் செலுத்துவதுடன் பெற்றோர்களும் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதில் ஏழை பணக்காரன் என்ற பாரபட்சம் இல்லாமல் சட்டங்களை நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 
5. திப்பு சுல்தான் மணிமண்டபம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்:

தமிழக அரசு கடந்த பட்ஜெட்டில் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டு வீர மரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என தீர்மானித்து அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும் இதுவரை அதற்கான அடிக்கல் நாட்டுவிழா கூட நடைபெறவில்லை. இதில் உள்ள நெருக்கடிகளையும், முட்டுக்கட்டைகளையும் சரி செய்து உடனடியாக மணி மண்டபம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தி பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை தமிழக
அரசு நிறைவேற்ற வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 
6:தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்கள்: நியூட்ரினோ திட்டம்:

தேனி மாவட்டம் போடி மலைப் பகுதியில் அமைந்துள்ள பொட்டிபுரம் கிராமத்தில் இயற்கை பேரழிவு திட்டமான நியூட்ரினோ ஆய்வு மையம் ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குறியது.
ஏற்கனவே அஸ்ஸாமிலும், கேரளாவிலும் இத்திட்டம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டபோது அந்ததந்த மாநில மக்களின் எதிர்ப்பினால் இது கைவிடப்பட்டது. இந்நிலையில் தமிழக மக்களின் எதிர்ப்பை மீறி கடந்த ஜனவரி 5ஆம் தேதி மத்திய அமைச்சரவை இத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. நியூட்ரினோ ஆய்விற்காக மலையில் சுரங்கம் தோண்டும் போதும், அதற்காக மலையை தகர்க்கும் போதும் அப்பகுதி முழுவதும் பூமி அதிர்ச்சி எற்படுவதை போன்று குலுங்கி பேரதிர்வு ஏற்படுவதுடன், சுற்றியிருக்கும் விவசாய நிலங்கள் பாழ்பட்டு பெரும் இயற்கை அழிவுகளை சந்திக்க நேரிடும். ஏற்கனவே இத்தாலியில் இது போன்ற ஆய்வு மையம் அமைக்கப்பட்டு மக்கள் போராட்டத்தால் மூடப்பட்டது. எனவே மக்களை அச்சுறுத்தும், இயற்கையையும் விவசாயத்தையும் பேரழிவிற்கு உள்ளாக்கும், நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்கும் திட்டத்தை உடனே மத்திய அரசு கைவிட வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. மீத்தேன் எரிவாயு திட்டத்தால் பல்வேறு அபாயங்கள் உள்ளன. 1500 அடி ஆழத்திற்கு மேல் ஆயிரக்கணக்கான துளைகள் இடப்பட்டு குழாய்கள் பதித்து, நிலத்தடி நீரை வெளியேற்றுவதால் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் கிடைக்காமல் காவிரி படுகை பாலைவனமாக மாறும், சென்னை முதல் ராமேஸ்வரம் வரை கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.
 
மீத்தேன் திட்டம்:

பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரி பாலங்களை அழுத்தி விரிசல் உருவாக்குவதற்காக வேதிப்பொருள்கள் அடங்கிய கலவை குழாய் வழியாக அடி ஆழத்துக்குச்செலுத்தப்படும். இதில் வெறும் 30 சதவிகிதம் மட்டுமே திரும்ப வெளியில் எடுக்கப்படும். 70 சதவிகிதம் நிலத்துக்குள்ளேயே தங்கி விடும். அது நிரந்தரமாக மண்ணை விஷமாக்கி விடும். இந்த ரசாயனக் கழிவு குடிநீரில் கலந்தால், புற்றுநோய், தைராய்டு உள்ளிட்ட பல நோய்கள் உருவாகக்கூடும். மேலும் மீத்தேனை எடுத்துச் செல்ல குழாய்கள் பதிப்பதற்காக ஏராளமான நிலங்கள் கையகப்படுத்தப்படும். இதனால் விவசாயத்தையே வாழ்க்கையாகக் கொண்ட லட்சக்கணக்கான குடும்பங்கள்
வேறு தொழில்நாடி இடம் பெயர நேரிடும். மொத்தத்தில் டெல்டாவின் பங்களிப்பான 36% உணவு உற்பத்தி பாதிக்கப்படும். எனவே மத்திய மாநில அரசுகள் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை எந்த நிபந்தனையுமின்றி முற்றிலுமாக நிறுத்திட வேண்டும்,காலாவதியான ஒப்பந்தங்களை தமிழக
அரசு புதிப்பிக்கக்கூடாது எனவும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 
7:பகுதி வாரி மாநாடுகள் (ஏரியா கான்பிரன்ஸ்):

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு மக்கள் பேரியக்கம். அனைத்து தரப்பு மக்களின் சமஉரிமைக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சமூக முன்னேற்றம், நீதிக்கான போராட்டம் என பல்வேறு பணிகளை முன்னெடுத்து செயல்பட்டு வருகிறது. மேலும் பணிகளை வலுப்படுத்தும் முகமாக தேசம் முழுவதும் பகுதி வாரியாக மாநாடுகளை (ஏரியா கான்பிரன்ஸ்) நடத்த தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஏரியாக்கள் மற்றும் நகரங்கள் தோறும் மாநாடு நடைபெறும். இம்மாநாட்டிற்கு
பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ளுமாறு இப்பொதுக்குழு அன்புடன் அழைக்கிறது.
 
8:பூரண மதுவிலக்கை அமுல் படுத்த வேண்டும்:

மக்களுக்கு கல்வியையும், ஒழுக்கங்களையும் போதித்து கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும், சட்ட ஒழுங்கையும் பேணி பாதுகாக்க வேண்டிய அரசு தானே மதுக்கடைகளை நடத்துவது என்பது இழிவானதாகும். இப்போது மதுப்பழக்கம் இளைஞர்களை வெகுவாக சீரழித்து வருகின்றது .சமீபமாக இந்தப்பழக்கம் பெண்களிடமும்,சிறுவர்களிடமும் பரவி வருவது கவலைக்குரியதாகும். மதுப்பழக்கத்தால் லட்சக்கணக்கான பெண்கள் பெரும் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். வாழ்க்கையை இழந்து வருகிறார்கள். பின் தங்கியுள்ள ஏழை மற்றும் தொழிலாளர்களின் வாழ்வையும், எதிர்காலத்தையும் இது சீரழித்து வருகிறது. நாட்டில் பரவி வரும் ஒழுக்கக்கேடுகளும், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் போன்ற சட்ட ஒழுங்கு பிரச்சினைகளுக்கு மதுவே காரணமாக விளங்குகிறது. இந்த சீர்கேடுகளை தடுக்க வேண்டிய மற்றும் கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டிய அரசு தமது பொறுப்பை மறந்து இலவசங்களுக்காக பயன்படும் வருமானத்திற்காக மட்டுமே மதுக்கடைகளை நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது. எனவே மக்களின் நலன் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு படிப்படியாக மதுவிலக்கை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
 
9:இலங்கையில் நீதியும் மக்கள் உரிமைகளும் நிலை நாட்டப்பட வேண்டும்:

இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் முந்தைய ஜனாதிபதி ராஜபக்சே தோல்வியை தழுவி புதிய ஜனாதிபதியாக ஸ்ரீ சேனா அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்.ராஜபக்சேவின் தோல்வி அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள்,தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் மற்றும் மக்கள் விரோத செயல்பாடுகளின் விளைவு தான் என்பது தெளிவாகிறது. இதை மனதில் கொண்டு புதிய ஜனாதிபதி ஸ்ரீ சேனா அரசு முந்திய அரசின் செயல்திட்டங்களில் இருந்து பாடம் படிக்க வேண்டும். குறிப்பாக 2009ஆம் ஆண்டு நடந்த போரில் பாதிக்கப்பட்டு அகதிகளாக உள்ள தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் அங்கு சிறுபான்மையினராக உள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவும் அனைத்து மக்களுக்கும் நீதிமிக்க ஆட்சி நடத்தவும் இப்பொதுக்குழு வேண்டிக்கொள்கிறது.
 
பத்திரிகையாளர் சந்திப்பு :

பொதுக்குழு நிறைவடைந்த பின்னர் தேசிய பொதுச்செயலாளர் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முந்தைய மாநில தலைவர் A.S.இஸ்மாயீல், புதிதாக தேர்ந்தேடுக்கப்பட்ட மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயீல், மாநில துணைத்தலைவர் A.ஹாலித் முஹம்மது, மாநில பொதுச்செயலாளர் M.முஹம்மது ஷேக் அன்சாரி, மாநில செயலாளர்கள் J.முகம்மது ரசீன், A.முஹைதீன் அப்துல் காதர் மற்றும் மாநில பொருளாளர் S.இப்ராஹீம் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
தொகுப்பு:

 
ரிப்போர்ட்டர் இல்யாஸ்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)